ரிஷபம்

    12 ராசிகளுக்குமான 2015 மன்மத வருட ராசிபலன்கள்

     மேஷம் - ரிஷபம் - மிதுனம் - கடகம் - -சிம்மம் - கன்னி

    2015 – 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை
    ரிஷபம்
       (கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2 ஆம் பாதம்  முடிய)
    ரிஷபராசி நேயர்களே!
            வட்ட முகமும் வசீகரத் தோற்றமும் வார்த்தை ஜாலமும் அழகான நடையும், பருத்த தொடைகளும் உடையவர்கள்.  திட்டம் போட்டு வட்டத்திற்குள் வாழாமல் வசதியாக வாழ்வதே லட்சியம் என நம்புபவர்கள்.  முகம் அல்லது முதுகுப் பக்கத்தில்  லேசான வளைவு அல்லது வடு அல்லது தழும்பு கொண்டவர்கள். மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த நினைப்பீர்கள். உங்கள் தயாள குணம் அதத்தடுத்து நிறுத்திவிடும்.
           எப்பொழுதுமே சொந்தங்களையும் பந்தங்களையும் அடிக்கடி கண்காணித்து நல்லவர், தீயவர், துரோகிகளை   ஒருபொழுதும் வெளியில் சொல்லமாட்டீர்கள். ஈவு, இரக்கம், சாந்தம், சமாதானத்தை நீங்கள் அதிகமாகவே விரும்புவீர்கள்.  வாலிப வாழ்க்கையிலும் சரி, வயோதிக  வாழ்க்கையிலும் சரி நீங்கள் என்றும் பதினாறாக மார்க்கண்டேயனைப் போலவே வாழ ஆசைப்படுவீர்கள்.
       குழந்தைச் செல்வங்களால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிமழை பொழிந்து கொண்டேயிருக்கும்.  உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் உங்களைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி வருவார்கள்.  எந்த நிலையிலும் உங்கள் மனதில் முதலாளி என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.  எந்த வாதத்தையும் நயம்பட பேசி வெற்றிகாண்பதில் நீங்கள் கில்லாடிகள் நேர்மை, நீதி, நாணயத்துக்காக நீங்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
      உங்களைவிட வயதில் மூத்தவர்கள் கூட உங்களிடம் யோசனை  கேட்க அடிக்கடி உங்களைத் தேடி வருவார்கள்.
        தன் வைத்தியம் தனக்கு பலிக்காததுபோல, உங்கள் யோகமும், ராசியும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு மட்டுமே பயன்தரும்.
       சிக்கனம் என்றால் என்ன ? சேமிப்பு என்ன செய்யும் என்று  உங்களிடமிருந்து தான் மற்றவர்கள் படிக்க முடியும். அதனால் வரும் நன்மைகள் என்ன என்பதை உங்களிடமிருந்து படித்துக் கொள்ளலாம். யாராக இருந்தாலும் உண்மையாக உழைத்தால்தான் உயர்வு என்ற உண்மையை உணர்ந்தவர்கள்  நீங்கள். ஒருசில சமயங்களில் மற்றவர்களை செலவு செய்யவைத்து அதன்மூலம்  ஆனந்தமும் அடைவீர்கள். பொன்,பொருள், ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்ற சுகமான வாழ்க்கைக்கு ஒரு போதும் உங்களுக்கு குறைவே இருக்காது.
          உங்கள் ராசிநாதன்  சுக்கிரன் பல்வேறு முன்னேற்றத்துக்கு அடித்தளம் வகுத்துக்கொடுப்பார்.  கடந்த ஆண்டு எண்ணற்ற  பிரச்சனைகளை நீங்கள் சந்திருப்பீர்கள். குறிப்பாக முயற்சிகளில் தடை ஏற்பட்டிருக்கும்.  குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திருப்பீர்கள். 16-12-2014  முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7ல் விருச்சிகத்தில் உள்ளார். கண்டச்சனி நடக்கும்.  எனவே எதிலும்  நிதானித்துச் செல்ல வேண்டும்.  சனி பகவான்  மன்மத வருடம் ஆரம்பம் முதல் ஜீலை 29 வரையிலும் வக்ரம் அடைகிறார்.  அவர் வக்ரமாக உள்ள காலங்களில் கெடுபலன்களைத் தரமாட்டார். கொடுக்கல் - வாங்கல் தொழில் செய்பவர்கள் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
     குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3ல் உள்ளார்.
    5-7-2015ல் அவர் சிம்ம ராசியில் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்கிறார். அங்கு அமரும் குரு பகவான் 5ம் பார்வையாக தன் சொந்த வீட்டைப் பார்க்கிறார்.  குரு 4ல் உள்ள படியால் ஒருசிலர்  வேறு நகரம் செல்வார்கள். எனவே உறவினர்களிடம் தள்ளிநின்று பழகிவரவேண்டும். கிட்ட உறவு முட்டப் பகையாக மாறிவிடும்.
        இந்த   மன்மத வருடத்தில் 8-1-2016  வரையிலும் சாயாகிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருப்பார். அதன்பிறகு ராசிக்கு 4ல்  வருவார். அதேபோல 8-1-2016 வரையிலும் உங்கள் ராசிக்கு 11ல் இருந்த கேது அதன்பின் 10ல் அமர்வார்.
      14-04-2015  முதல் 12-06-2015  வரை குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகம் ஏற்படும்.  ஒருசிலருக்கு சொத்து வாங்கி  அதனால் வில்லங்கம் உண்டாகலாம். இதனால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும்.  ஒருசிலர் மனைவிக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் உண்டாகலாம்.
        13-06-2015 முதல் 02-12-2015 வரை பிள்ளைகள் மீது கவனம் கொள்ள வேண்டும். அவர்களின் கல்வியில் வீண் தடைகளும் அதிகமாக செலவும் ஏற்படும்.  எந்த ஒரு காரியத்திலும் பாதுகாப்புடன் செயல்பட்டால் நல்ல பலன்களை அடையலாம்.
    3-12-2015  முதல் 21-12-2015 வரையிலும் லாபங்கள் அதிகமாகும். 22-12-2015  முதல் எதிலும் நிதானித்துச் செயல்பட வேண்டும். பழைய பாக்கிகள் தொந்தரவு கொடுக்கும்.  எனவே கடனை திரும்பச் செலுத்திவிட்டு, புதிய கடன் பெறாமல் இருப்பது உத்தமம். 1-2-2016 முதல் 13-4-2016 வரையிலும்  உங்களுக்கு யோகமான காலம்.  புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும்.  பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மையுண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள்  வந்துசேரும். ஒருசிலருக்கு மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு கிட்டும்.
    பெண்கள்  
     குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடித்தமானவர்களாகத் திகழ்வீர்கள். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கூடும்.  குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
    தொழிலதிபர்கள், வியாபாரிகள்
         ஆண்டுத் தொடக்கத்தில் நல்ல பொருளாதார வளம் இருக்கும்.  புதிய தொழில் தொடங்க தொழிலாளர்கள் உதவியாக இருப்பார்கள்.  தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிட்டும்.
    மாணவர்கள்  
         மன்மத ஆண்டில் மாணவர்கள் படித்து நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.  கல்வியோடு விளையாட்டு கலைத்துறையிலும் ஆர்வம் கொள்வார்கள்.
    கார்த்திகை (2,3,4 ஆம் பாதம்)  நட்சத்திரக்காரர்களுக்கு
            சித்திரை முதல் ஆடி வரை 2 பங்கு லாபம் உண்டு. கஷ்ட ஜீவனம் வராது.
     மார்கழி மாதம் முதல்  பங்குனி வரை வருமானக் குறைவு உள்ளது சேமிப்பே உங்களுக்குக் கைகொடுக்கும்.
    ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு
           சித்திரை முதல் ஆடி வரை 5 பங்கு லாபமுண்டு. செளபாக்கியத்துடன் எதிர்காலத்துக்கு வேண்டிய  சேமிப்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.
     மிருகசீரிட(1,2-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
         சித்திரை முதல் ஆடி வரை வருமானம் குறைவாக உள்ளது. வரவைவிட செலவுகள் கூடுதலாகும்.
      மார்கழி மாதம் முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் இருக்கும். கடன்  வாங்க நேரலாம்.
    ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
           ஆண்டுமுழுவதும் ஏகாதாசி திதியன்று பெருமாள் ஆலயம் சென்று நெய்விளக்கு ஏற்றி 18 முறை வலம்வந்தால் நல்ல பலன்களை  அடையலாம்.  கிருஷ்ணர் அருள் கிடைக்கும்.  முடியாதவர்கள் மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் பசுவுக்கு மஞ்சள், குங்குமம்  தடவி வாலைத் தொட்டு வணங்கினால் நன்மையுண்டு. ஆண்டு முழுவதும் பெருமாள்  உங்களுக்கு துணைநிற்பார்.

    வாழ்க வளமுடன்