கன்னி
(உத்திரம் 2ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே!
புத்தி கூர்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி காண்பவர்கள் நீங்கள். இவர்கள் புகழ்பெற்ற குடும்பத்தில் தான் பிறப்பார்கள். தரித்திரத்தையும் வறுமையையும் சந்தித்த பிறகுதான் வெற்றிகொண்டு சாதிக்க வேண்டுமென்பது இவர்களது ஊழ்வினையின் விதி!
தெய்வீக வழிபாடுகளில் சிறந்துவிளங்கும் அடியார்களாகவும் ஆச்சார அனுஷ்டான சிலர்களாகவும் நீதி, நேர்மை, பண்புடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
தங்களது இளமைக்காலத்தில் வறுமையிலும், கஷ்டத்திலும் உழன்றாலும், எதிர்காலத்தில் வசதி வாய்ப்புகளோடும் செல்வச் செழிப்போடும் திகழ்வார்கள். எந்த நிலையிலும் தன்னடக்கத்தோடும் வாழ்பவர்கள் உண்மையைப் பேச அஞ்சமாட்டார்கள். வேதங்கள் வேதசாஸ்திரங்கள், ஆடல், பாடல், நடனம், நாடகம், நடிப்பு இசை, இலக்கணம், இலக்கியக் கூட்டம், பட்டிமன்றம் சொற்பொழிவு உபன்யாசம் போன்ற இடங்களிலெல்லாம் கன்னி ராசிக்காரர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கும்.
நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுக்கநெறியான வாழ்க்கை வாழவிரும்புவார்கள். அழகான முகமும்,வசீகரத் தோற்றமும் வார்த்தை ஜாலமும் வசீகரப் பேச்சும், இனிமையான குரலும் கொண்டவர்கள்.
எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு இன்பம் வந்தாலும் அதை ஒருபோதும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். வறுமையிலும், செழுமையிலும் ஒரே மாதிரியாக இருப்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள்.
இவர்கள் உழைப்பு எப்பொழுதுமே மூளை, அறிவு சார்ந்த உழைப்பாகவே இருக்கும். உடல் சார்ந்த – தேகம் சார்ந்த உழைப்பு எப்பொழுதுமே குறைவாகவே இருக்கும்.
இவர்கள் வாழ்க்கை முழுவதும் சம்பாதிக்க ஆசைப்படுவார்கள். வீடு, வாசல், வண்டி, வாகனம் போன்ற எல்லா யோகமும் இவர்களின் சொந்த சம்பாத்தியமாகவே அமையுமென்றால் அதில் ஆச்சரியமில்லை.
இவர்களை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. பழைய சாமான்கள் பழங்காலத்து நாணயங்கள் புராதனப் பொருட்களை சேகரித்து பாதுகாத்து வைத்துக்கொள்ளும் ஆர்வம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
குரு பகவான் 4-7-2015 வரையிலும் உங்கள் ராசிக்கு 11ல் அதாவது கடக வீட்டில் இருப்பார். எனவே நீங்கள்
4-7-2015 வரையிலும் நல்ல பலன்களை அடைவீர்கள். இதற்கு முன்னர் உங்களுக்கு இருந்துவந்த ஞாபக மறதி, அலைச்சல், நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
புதிய முயற்சிகள் யாவும் சிறப்பு தரும் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமாகி நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பொருளாதார வளம் மேம்படும். ஒருசிலருக்கு உத்தியோகம் சிறப்படைந்து நல்ல பதவி கிடைக்கும்.
சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து சேர்வார்கள். நீண்ட காலமாக வெளிநாட்டில் வாழ்ந்து வரும் பிள்ளைகளில் சிலர் இப்போது தங்கள் தாய் - தந்தையரை காணவருவார்கள். சகோதரிகள் தங்கள் உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள்.
குரு பகவான் 5-7-2015 முதல் உங்கள் ராசிக்கு 12ல் வருகிறார். அச்சமயம் நீங்கள் குரு பகவானை வியாழந்தோறும் தரிசித்து வருவது உத்தமம். குரு 12ல் இருக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவதால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். தொழிலாளர்களின் போக்கில் தவறு கண்டாலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மென்மையான போக்கை கடைபிடித்தால் அவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்கிறவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வரும். எனவே கணக்கு கேட்பதிலும், பார்ப்பதிலும் நிதானமாக போக்கை கடைப்பிடிக்க வேண்டும். கடன் தொந்தரவுக்காக ஒருசிலர் பூர்வீக சொத்துகளை விற்க வேண்டிய நிலை வரும். மனதில் இனம்புரியாத உளைச்சல் உண்டாகும். குருவின் 5ஆம் பார்வையால் ஓரளவு நன்மை உண்டாகும். தந்தை சொத்தின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ல் உள்ளார். 3ஆம் இடமென்பது சகோதர ஸ்தானம் . இந்த மன்மத வருடத்தில் சனி பகவான் அவரவர் வயதுக்கேற்ப நல்ல பலங்களையே வழங்குவார். வேலைவாய்ப்பு, திருமணம், தூரதேசப் பயணம் பிரிந்தவர்கள் ஒன்றுசேர்தல், வழக்குகளில் வெற்றி, மருத்துவச் செலவுகள் குறைதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும். 5ஆம் இடம் குலதெய்வம் மற்றும் குழந்தை பாக்கியத்தை தெரிந்து கொள்ளும் இடம். சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 3ஆம் பார்வையாக ராசிக்கு 5ஆம் வீடான மகரத்தைப் பார்க்கிறார். நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். தந்தை சொத்துக்களை அடைவதில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் தொழில் செய்கிறவர்கள் நிதானமாகச் செய்ய வேண்டும்.
8-1-2016 முதல் ராகு பகவான் உங்களது ராசிக்கு 12ல் அமர்வார். ஒருசிலர் வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். நிலம், புதிய வீடு, வாங்குதல் போன்ற நல்ல பலன்களை அடைவார்கள். இதுவரை எட்டாக் கனியாய் இருந்துவந்த அரசுப்பணி ஒருசிலருக்கு வந்து சேரும். சொந்தமாக தொழில் செய்து சிலர் முன்னேறுவார்கள். அரசு நிதி உதவி போன்றவை தடையின்றிக் கிடைக்கும்.
8-1-2016 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ல் கும்ப வீட்டில் வருகிறார். வாகனங்களில் மிகவும் நிதானமாகச் செல்ல வேண்டும். காரைத் தவிர்த்து பேருந்து அல்லது ரயிலில் செல்வது உத்தமம் நல்லவர்கள் நட்புண்டு. அரசாங்க உதவியை எதிர்பார்த்திருக்கும் தொழிலதிபர்கள் எண்ணம் கைக்கூடும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் உயர்கல்வி பயில்வதில் இருந்துவந்த தடைகள் அகலும். இதுவரை வீட்டில் இருந்துவந்த பிள்ளைகள் சிலர் மத்திய அரசின் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
6ல் கேது பகவான் இருப்பதால் மனதுக்குள் எப்போதும் பயம் இருந்துகொண்டே இருக்கும். மனசாட்சிக்கு பயப்படுபவர்களை கேது பகவான் கெடுக்க மாட்டார்.
பெண்கள்
உங்களின் நிதானமான செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு மேம்படும். திருமணமாகாத பெண்களுக்கு 4-7-2015க்குள் திருமணம் முடியும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கும். அடுத்த கல்வியாண்டில் அக்கறை எடுத்து படிக்க வேண்டியது வரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
தொழில் மற்றும் வியாபாரத்தில் விறுவிறுப்பாகச் செயல்படுவீர்கள். புதிய தொழில் முயற்சியில் கால்பதித்து சாதனை படைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 4-7-2015க்குப் பிறகு நன்மைகள் குறையத்தொடங்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாகும். கேது 6ல் சாதகமற்ற நிலையில் உள்ளதால் நிர்வாகச் செலவுகள் கூடும்.
மாணவர்கள்
இந்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் – பெற்றொர்கள், ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி கல்வியில் உயர்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பீர்கள்.
உத்திர (2,3,4 ஆம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடிவரை 5 பங்கு லாபம் வருகிறது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை 1 பங்கு லாபம் மட்டும் வருகிறது. எனவே சிக்கனமாகச் செயல்பட வேண்டும்.
அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடி வரையில் லாபம் எதுவுமில்லை. அதிக செலவுசெய்யாது நிம்மதியாக வாழ்வீர்கள். காரியத் தடைகள் வராது. ஆவணி முதல்கார்த்திகை வரை 2 பங்கு லாபம் உள்ளது.
சித்திரை (1,2-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடி வரையிலும் 3 பங்கு லாபம் வருகிறது. குடும்பம் சீராகச் செல்லும். ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இல்லை. எனவே இப்போது உங்களுக்கு சேமிப்பே கைகொடுக்கும். எதிலும் நிதானமாகச் செய்து கொள்ளலாம்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
ஒவ்வொரு ஞாயிறும் காளியம்மனுக்கு எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முடிந்த வரை ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்துவர ஆண்டு முழுவதும் நன்மையான பலன்களை அடையலாம்.
வாழ்க வளமுடன்