துலாம்
(சித்திரை 3ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய)
துலாராசி நேயர்களே!
நீதி நேர்மை, வாக்குத் தவறாமை போன்ற விஷயங்களால் உலகமக்களின் இதயத்தில் இடம்பிடிப்பவர்கள். எல்லாவிதமான யோகங்களும் அஷ்டலட்சுமி கடாட்சமும் நல்ல ஐஸ்வரியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். பூமியோகம், செல்வவளம், வண்டி,வாகனம் ஆளடிமை போன்ற பல யோகங்களோடு இருப்பவர்கள்.
பசு, பால், பாக்கியம் யானைப்படை, குதிரைப்படை என்றெல்லாம் சொல்கிறோமே, அது துலா ராசிக்குத்தான் பொருத்தமாக இருக்கும். துலா ராசியில் பிறந்தவர்களின் பேச்சில் எப்பொழுதும் தீப்பொறி பறந்துகொண்டேயிருக்கும். பலரது பேச்சு எப்பொழுதும் சுயநலம் கொண்டதாகவும் வியாபார நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.
மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். இவர்களது வாழ்க்கை மற்றவர்களுக்குத்தான் அதிகமாகப் பயன்படும். மலர்ந்த முகமென்று சொல்வார்களே, அது இவர்களாகத்தான் இருக்கமுடியும்.
உங்கள் சம்பாத்தியத்தில் வரவு செலவு சரியாகவே இருக்கும். பணத்தை சேமித்துவைக்க அரும்பாடுபடுவீர்கள். வயிறு சம்பந்தமான கோளாறும், அஜீரணம், வாயு, புளியேப்பம், போன்றவையும் ஏற்பட்டு விலகும்.
உங்கள் வாழ்க்கையில் அதிகமான ரகசியங்கள் புதைந்துகிடக்கும். முன்கோபமும் உங்களுக்கு அதிகமாகவே உண்டு. தெய்வபக்தி கொண்டவர்கள். பெரியவர்கள் மீது எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.
புத்தகங்கள் வாயிலாக பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். உங்களது வீட்டில் ஒரு புத்தகசாலையே இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்களை விரும்பிச் செய்வீர்கள்.
4-7-2015 வரையிலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ஆவது ஸ்தானத்தில் இருப்பார். இப்போது குரு 10ல் இருப்பது சிறப்பில்லை. என்றாலும் உங்கள் சுயஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இடம்பெற்றிருந்தால் அதிகமான கஷ்டங்கள் வராது. புதிய கடன் வாங்கநேரும். வரவுக்குள் செலவு செய்து புதிதாக கடன்படுவதைத் தவிர்க்கலாம்.
குரு பகவான் 5-7-2015ல் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு வருகிறார். சிம்மம் உங்கள் ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானமாகும். தொழில் செய்பவர்களும் வணிகம் செய்பவர்களும் மிகவும் விழிப்பாகச் செயல்பட வேண்டும். பணப்பிரச்சினைகளை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் மத்தியில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம்கிடைக்கும். புத்திர, புத்திரிகளால் நல்ல முன்னேற்றம் காணப்படும். இப்போது நீங்கள் புதிய கடன் பெற்று தொழில் துவங்குவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும் ஒரு சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
9ம் இடத்து பார்வையால் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆடம்பர வசதி மேலோங்கும்.
சனி உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான சூரியன் வீட்டை 10ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே உடன் பிறந்தோர்களிடையே உறவுகள் சுமூகமாக இருக்காது. மூத்த சகோதர - சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இல்லை. திருமணமாகி, கணவன் வீட்டிலுள்ள துலா ராசிப் பெண்கள் கணவன் மனம் கோணாமல் நடக்க வேண்டும். சில சோதனைகளுக்கு பின்பு சனி பகவான் கோபுர உச்சி அளவுக்கு நன்மைகளையும் செய்வார். எனவே நீங்கள் எப்போதும் நிதானமுடன் செயல்பட வேண்டும்.
ராசிக்கு 5ஆம் இடம் குலதெய்வம் மற்றும் குழந்தை பாக்கியத்தை தெரிந்துகொள்ளும். ஒருசிலர் குழந்தை பாக்கியமே கிட்டாதென்று இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள்.
ராசிக்கு 12-ல் உள்ள ராகுவால் அதிகமான அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இப்போது நீங்கள் நினைத்தபடி அனைத்து காரியங்களிலும் வெற்றியையும், பொருளாதார உயர்வையும் பெறுவீர்கள். உங்கள் ஜாதகத்தில் 10க்குரியவர் 6ல் வந்தாலும் 6க்குரியவர் 10ல் வந்தாலும் கூட்டாளிகளை நம்பக்கூடாது. ராகு பகவான் 12ல் உள்ள இந்தக் காலகட்டத்தில் பயணங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் ஒருசிலருக்கு இடமாற்றம் வரும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்பதவியில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரும். குலதெய்வத்தை வழிபட்டு எந்த காரியத்தியும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வரும். ஒருசிலர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசித்துவந்து நல்ல பலன்களை அடைவார்கள்.
6ல் உள்ள கேது பகவான் சந்தோஷ செய்திகளையே வழங்குவார். ஒருசிலர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார்கள். முக்கிய நபர்கள் உங்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு நடத்திவைப்பார்கள். எப்போதும் குடும்பத்தில் சுபச் செலவுகளே நடக்கும். ஆன்மிகப் பயணம் ஆன்மிக பேச்சுகளில் அதிக ஈடுபாடு ஏற்படும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும், கீர்த்தியும் உருவாகும். எதையும் சாதிக்கும் வல்லமை ஏற்படும். ஒருசிலருக்கு கெளரவ பதவியும், அதிக லாபமும் கூடி வரும். குடும்பத்தில் கல்வி உயர்வு, திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குக் குறைவிருக்காது.
பெண்கள்
பிள்ளைகளால் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டாலும் அவர்களின் வளர்ச்சிகண்டு சந்தோஷம் காண்பீர்கள். கணவர் வீட்டாரின் ஆதரவு சீராகக் கிடைக்கும். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணம் வாங்கிச் சேர்ப்பார்கள். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் வரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைபட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சீராகக்கிடைக்கும். தொழில் வியாபாரரீதியான வெளியூர் வெளிநாட்டுப்பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி ஆகியவற்றை 5-7- க்குப் பிறகு 11ல் வரும்போது மேற்கொள்ள வேண்டும் . இந்த ஆண்டு 5-7-2015 முதல் உங்களுக்குப் பொற்காலம். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வசந்த காலம்.
மாணவர்கள்
இந்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர் - பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி கல்வியில் உயர்வார்கள்.
சித்திரை (3,4-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடி வரையிலும் 3 பங்கு லாபம் வருகிறது. குடும்பம் சீராகச் செல்லும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இல்லை. எனவே இப்போது உங்களுக்கு சேமிப்பு கைகொடுக்கும். எதிலும் நிதானமாகச் செல்ல வேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரையிலும் 3 பங்கு லாபம் வருகிறது. இப்போது நீங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம். குடும்பத் தேவைகள் அனித்தும் பூர்த்தியாகும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு
இந்த ஆண்டு சித்திரை முதல் ஆடி வரையிலும் 6 பங்கு லாபம் உள்ளது.
ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 1 பங்கு வருமானம் வரும். நினைத்த பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். இந்த காலகட்டத்தில் செளபாக்கியம் உண்டு.
மார்கழி முதல் பங்குனி வரையிலும் வருமானம் சீராக இல்லை. எனவே, அதிக செலவுகளைத் தவிர்க்க வேண்டும். நிதானித்துச் செலவிடாவிடில் அதிக கஷ்டம் வரும். காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும்.
விசாக (1,2,3 ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
சித்திரை முதல் ஆடி வரையிலும் 1 பங்கு லாபம் உண்டு. காரிய வெற்றி உண்டு.
ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சுமாராக உள்ளது. எனவே தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரையிலும் 4 பங்கு ஆதாயம் உண்டு. செளபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவருக்கு வெள்ளைப் பூசணியில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவேண்டும். தேய்பிறை அஷ்டமி திதியில் நாட்டு நாய்க்கு சாதம் வைத்துவர கஷ்டம் குறையும். வளர்பிறை ஏகாதசி திதியில் பெருமாளை தரிசித்துவர மேலும் சிறப்புண்டு.
வாழ்க வளமுடன்